Wednesday, March 28, 2007

நொந்து நூலாகி அந்து அவலாகிப் போயிருக்கும் இந்திய அணியினர் மக்களிடமிருந்தும் மீடியாவிடமிருந்தும் எப்படியோ எஸ்கேப்பாகி சென்னை வருகின்றனர்। அங்கு ஏற்கனவே அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் விஐபிக்கள் சிலரை சந்தித்து ஆலோசனை பெற ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்கின்றனர். அல்டிமேட் ஸ்டார் அஜித், இயக்குநர் இடிதாங்கி பேரரசு, புரட்சிப்புயல் வைகோ என நம்மூர் ஆட்கள் கிரிக்கெட் அணியினரை தேற்ற வந்திருக்கின்றனர். 'அசத்தப் போவது யாரு', 'அரட்டை அரங்கம்' ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு டி.ஆரும் யாரும் கூப்பிடாமலே வந்திருக்கிறார்.

ஏதோ ஒரு சங்க மீட்டிங் என்று மண்டபத்துள் எட்டிப்பார்க்கும் சின்னக் கலைவாணர் விவேக்கை அலேக்காக பிடித்து உள்ளே இழுத்துவருகிறார்கள் நம் வீரர்கள்।

விவேக்: டேய் இங்க என்னடா நடக்குது? யாருடா நீங்கல்லாம்? உங்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேடா?

டிராவிட்: விவேக் சார், நாங்க கிரிக்கெட்ல தோத்ததை எப்படி சமாளிக்கறதுன்னு ஏற்கனவே அவுட் ஆப் பார்ம்ல இருக்கவங்க கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு வந்திருக்கோம்। நீங்களும் உங்க அறிவுரையை சொல்லி எங்களைக் காப்பாத்தனும்

விவேக்(ஹை பிட்சில்): அடப்பாவிகளாஆஆ...அவுட் ஆப் ஃபார்முன்னு டிக்ளேரே பண்ணிட்டீங்களாடா...இனி நான் என்ன சொன்னாலும் கேட்கப்போறதில்ல...சரி உங்க மீட்டிங்கை நீங்க நடத்துங்க।நான் ஒரு கட்டிங் விட்டுட்டு கார்னர்ல உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கறேன்

அவர் முடிப்பதற்குள் டி।ஆர் துள்ளிக் குதித்து எழுகிறார்

விவேக்: ஏன் சார் இந்த ஆரஞ்சு கலர் சட்டை எல்லாம் எங்கே புடிக்கறீங்க? ரொம்ப டைட்டாயிருக்கே॥சிம்புவோடதா??

அதை கண்டுகொள்ளாத டி।ஆர் கோபமாக :
"கவர்ன்மெண்ட் ஸ்கூல் பேர் பால்வாடி
பைத்தியம் முத்தினா நம்மூர் ஏர்வாடி
சம்பாத்திச்சீங்களேடா பல கோடி
ஏமாத்திட்டீங்களே மோசமா விளையாடி"

என கண்களில் கண்ணீர் வழிய ஹைபிட்சில அலறுகிறார்।

வழக்கம் போல யாருமே அவரை கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர்

டிராவிட்: இதெல்லாம் விளையாட்டுல சகஜம்। ஆனா மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்கதான் எங்க இமேஜை வளர்க்க ஏதாவது ஐடியா கொடுக்கனும் என மற்றவர்களைக் கேட்கிறார்

அஜித்: நான் பேஸ்மாட்டேன்। ஜெயிச்சுட்டு தான் பேஸ்வேன். என்னை யாரும் அழிக்க முடியாது. நான் தண்ணி ஊத்தி வளர்த்த ஸ்டேடியம் புல் இல்ல॥தானா வளர்ந்த காட்டுப் புல்.

விவேக்: பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்னு பேஸ் வாய்ஸ்ல பேசி டார்ச்சர்ஸ் பண்றாரே

சாப்பல்: அஜித், இப்ப நான் கூட உங்க ஐடியாதான் ஃபாலோ பண்றேன்। மீடியாகிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்

அஜித்: அதுஉஉ

என டெசிபலை ஏற்றி அலறுகிறார்

அப்போது அங்கே யாரோ விசும்பும் சத்தம் கேட்கிறது। வைகோ கருப்புத்துண்டை முகத்தில் பொத்தியபடி அழுதுகொண்டிருக்கிறார்

விவேக்: பொடால போட்டாங்க அழுதீங்க। கூட்டணியைவிட்டு வெளிய வந்ததுக்கு அழுதீங்க. கட்சியை உடைச்சதுக்கு அழுதீங்க. நடைபயணத்துல கால் வலிச்சுது அழுதீங்க. இப்ப கிரிக்கெட்ல தோத்ததுக்கும் அழனுமா? வைகோ சார், கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.

வைகோ: ஐயகோ என் உடன்பிறப்பே, உலகக்கோப்பையை நீ வென்றிருந்தால் கலிங்கப்பட்டியில் பிறந்த நான் உங்கள் பேரில் கலிங்கத்துப்பரணி பாடியிருப்பேனே... இப்படி தோற்றுவிட்டீர்களே

இதைக் கண்டு செண்டிமெண்டில் ஃபீலாகும் வீரர்கள் வைகோவை தேற்றுகின்றனர்।

வைகோ: 1970களிலே இங்கிலாந்து கிரவுண்டுகளிலே சிக்ஸர் சிக்ஸராக அடித்தானே என் உடன்பிறப்பு விவ் ரிச்சர்ட்ஸ், அவன் மண்ணிலே போய் நாம் தோற்றதுதான் அவமானமாக இருக்கிறது

என்று கோபமமக ரியாக்ஷனை அப்படியே மாற்றுகிறார்।

விவேக்: அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரியாக்ஷன் காட்டறாரே। இவரை இப்படியே பேசவிட்டா நாம தனியா பொதுக்குழு நடத்தனும் போலிருக்கு. அஜித் நீங்க என்ன ஒரே பஞ்ச் டயலாக்ல நிறுத்திட்டீங்க. வேற ஏதாவது ஐடியா குடுங்க

அஜித்: டிராவிட்ஜி, யாராவது ஓட்டலுக்கு டிஸ்கஷன் கூப்பிட்டா போகாதீங்க। கூப்பிட்டு வச்சு குமுறி அப்புறம் டீம்ல இருந்தே தூக்கிடுவாங்க. 'நான் கடவுளுக்கு' உடம்பை குறைச்சு என் பாடி வெயிட்டை விட தலைமுடி வெயிட் அதிகமா ஏத்திவச்சிருந்தே. கடைசில படத்துல இருந்தே தூக்கிட்டாங்க. இனிமே நீங்க் பிரஸ்மீட் போனா 'நான் கேப்டன்'ன்னு அடிக்கடி சொல்லுங்க. அப்ப தான் டீம்ல நிலைக்க முடியும். நீங்க இருக்கறது பஞ்சுமெத்தை. நான் சுமக்கறது முள்கிரீடம்.

டிராவிட் 'நான் கேப்டன்ன்ன்' என சொல்லிப்பார்க்கிறார்

டி।ஆர்: கிரிக்கெட் டீமுக்கு நீ கேப்டன்
பனிக்காலத்துல காதுக்கு வச்சுக்க காட்டன்
சினிமால எல்லாருக்கும் நான் பாட்டன்
சிம்புவுக்கு மட்டும்தான் சொல்வேன் வெல்டன்

விவேக்: இவர் வேற சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி கழுத்தறுக்கறாரே। இங்க வில்லங்கம் புடிச்ச ஒரு கேரக்டர் ரொம்ப நேரமா அமைதியா இருக்கே...ஆளைப் பார்த்தா அத்தனை பேரையும் க்ளீன் போல்டாக்க ஏதோ ப்ளானோட இருக்க மாதிரி இருக்கு. பேரரசு சார்॥ ஏதாவது பேசுங்க

பேரரசு: என்னான்னு சொல்வேனுங்கோ, சீமானெல்லாம் சேகுவேரா டி-ஷர்ட்டை கழட்டிட்டு காக்கிச்சட்டை மாட்டி இன்ஸ்பெக்டரா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு। நான் காக்கிச்சட்டை மாட்டி ஆட்டோ டிரைவரா நடிச்சா ஒத்துக்க மாட்டேங்கறாங்க.

டிராவிட்: உங்க பிரச்சனையை விடுங்க பேரரசு। நீங்க தான் தமிழ்நாட்டுக்கே தலைவலின்னு கேள்விப்பட்டோம். எங்க பிரச்சனைக்கு உங்க கிட்ட ஏதாவது தீர்வு இருக்கா?

பேரரசு: இருக்கு சார்। மொதல்ல உங்க பேரெல்லாம் மாத்துங்க. என்ன பேர் இதெல்லாம்? ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்னு? நல்லாவா இருக்கு?? நான் சொல்ற மாதிரி பேரை மாத்துங்க॥டிங்கர் டிராவிட், சலம்பல் சச்சின், கவுதாரி கங்குலி, யுனானி யுவராஜ், தோட்டா தோனின்னெல்லாம் பேரை மாத்துங்க

விவேக்: அப்படியே சனியன் சாப்பல்னு மாத்தி கெஜட்ல உட்டுடலாமா??

பேரரசு(தான் கவனிக்கப்படுவதைக் கண்டு சந்தோஷமாக): அப்படியே இனி விளையாடப்போனா கிரீமெல்லாம் தடவிட்டு போகாதீங்க। வடபழனி முருகன் கோயில் வாசல்ல சந்தனம் வாங்கிட்டு போய் மொகத்துல தடவிட்டு ஆடுங்க. இதனால அட்வாண்டேஜ் என்னன்னா மேட்ச் பார்க்கற ஜனங்களுக்கு யார் அவுட் ஆகறீங்கன்னே தெரியாது. எஸ்கேப் ஆகிடலாம்

விவேக்: அப்படியே ஒரு பஞ்சாமிர்த பாட்டில் வாங்கிக்கொடுத்துட்டா பெவிலியன்ல உட்கார்ந்து நக்கிட்டிருக்கலாமே

டி।ஆர்: தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி நலங்கு வைக்க கரைச்சு வச்சேன் சந்தனம்.... இந்த பயலுக தோத்ததால நொந்துபோச்சே என் மனம்॥ என ராகம் கட்டி பாட ஆரம்பிக்கிறார்

இனி இந்த ஏரியாவில் இருந்தால் யாராவது கடித்துவிடுவார்களென அஜித்தை இழுத்துக்கொண்டு எஸ்ஸாகிறார் விவேக்।


அப்போது "என்ன சார் நடக்குது இங்க? ஒரு தமிழன் இருக்கற இந்திய அணி உலகக்கோப்பைல தோக்குது। இப்படியாப்பட்ட கிரிக்கெட் நமக்கு வேணுமா? தமிழனோட மானம் எங்க போச்சு? டிராவிட் உங்க பசங்கள கடலூர்க்கு லாரில கொண்டாந்துருங்க. 'பள்ளிக்கூடம்' படத்துல கிட்டிப்புல் விளையாடற டீம் நீங்க. இந்த படத்தை வச்சு உங்க இமேஜை நான் தூக்கி நிறுத்தறேன். என்ன சார் நடக்குது இங்க?" என பத்து இருபது பேருடன் தங்கர்பச்சான் அலட்டலாக உள்ளே நுழைகிறார்.


பேரரசுவும் டீ. ஆரும் என்ன டயலாக் பேசலாமென கொலைவெறியோடு யோசிக்க, "பெரிய கலவரமே நடக்கப்போகுது ஓடிடுங்கடா அப்ரண்டீஸ்களா" என தன் டீமை இழுத்துக்கொண்டு தப்பியோடுகிறார் டிராவிட்

No comments: